Sunday, December 14, 2014

திருநெடுந்தாண்டகம் விளக்கவுரை- மூன்றாம் பாசுரம்

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-3

திரு வடிவில் கருநெடுமா‌ல் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடலமுதம் கொண்டகாலம்
பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை
ஒருவடிவத் தோருருவென்றுணரலாகா (து)
ஊழிதோறூழிநின் றேத்தல் அல்லால்
கருவடிவிற் செங்கண்ண வண்ணன் தன்னை
கட்டுரையே யாரொருவா் காண்கிற் பாரே.
  (3)
எளிமையான விளக்கம் அமைந்த பாடல், படித்தாலே விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாந்தம் விதாம்யஹமமீ முநயோக்ரஜாஸ்தே
மாயாபலஸ்ய புருஷஸ்ய குதோபரே யே |
காயந் குணாந் தஸஸதாநந ஆதிதேவ:
ஸேஷோதுநாபி ஸமவஸ்யதி நாய பாரம் || 41 ||
srimadbhagavatamclass 2-07-41
அகில உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் மாயை, இந்தப் பரம புருஷரான பகவானுடைய ஒரு துளி சக்தியே.  அவ்வாறான அளவற்ற சக்திகள் கொண்டவர் அந்தபகவான்.  அவரது உண்மை ஸ்வரூபத்தை (நிலையை) நானோ, உனக்கு முன் தோன்றிய ஸநகாதி முனிவர்களோ அறியோம்.  ஆயிரம் திருமுகங்கள் கொண்ட ஆதிதேவனான ஆதிசேஷனே, அவரது திருக்கல்யாண குணங்களை இன்னும் கீர்த்தனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.  ஆனால், முடிவுதான் காண இயலவில்லை.  அவ்வாறிருக்க, மற்றவர் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும்?    (41)

"வேதாந்தம் காட்டும் வழிவேறு.  புராணம் காட்டும் வழிவேறு. இந்த வாழ்க்கை ‌ஒரு மாய மாளிகை போன்றது.  உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்  இல்லாதது, கனவைப் போன்றது என்று வேதாந்தம் கூறுகிறது.  ஆனால் புராணங்களும், பக்தி சாஸ்திரங்களும், இறைவனே இருபத்து நான்கு தத்துவங்களாக ஆகி இருக்கிறான் என்றும் அவனை உள்ளேயும் வெளியேயும் பூசை செய்ய வேண்டும் என்கிறது."
 இப்படி இறைவனை இங்கு பக்திமாா்கமாக ஆழ்வாா் பாடுகிறாா்.
யுகம் தோறும் பகவான் நமக்காக பல்விதமாய் அவதாரம் செய்கிறாா் என்றும்,
அதில் சிவப்பாகவும், வெள்ளையாகவும்,  கருநீல வண்ணணாகவும் தோன்றும் அவனை எப்படி ஒரு  சொல்லில்  சொல்லிவிட முடியும் என வியந்து புகழ்கிறாா்.  மேலும், நாராயணனை இன்ன வண்ணம் இன்ன வடிவம் என்று எடுத்துக்கொள்ள  கூடாது என்பதையும், எல்லா வடிவமும், எல்லா நிறமும் எல்லாமுமாக உள்ள இறைவனை எல்லாமாக வணங்க வேண்டும் என இங்கு விளக்கப்படுகிறது.

இதையே , முண்டக உபநிஷத்,  பிரம்மத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறது

யத்ததத்ரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம்
அசக்ஷு: ச்ரோத்ரம் ததபாணிபாதம் |
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்
ததவ்யயம் யத் பூதயோனிம் பரிபச்யந்தி தீரா: || 6 ||

யத் - யார்; தத் - அவர்; அத்ரேச்யம் - பார்க்க முடியாதவர்; அக்ராஹ்யம் - புரிந்துகொள்ள முடியாதவர்; அகோத்ரம் - ஆரம்பம் இல்லாதவர்; அவர்ணம் - நிறங்களற்றவர்; அசக்ஷு: ச்ரோத்ரம் - கண்களோ காதுகளோ இல்லாதவர்; அபாணிபாதம் - கைகளோ கால்களோ இல்லாதவர்; நித்யம் - என்றென்றும் இருப்பவர்; விபும் - எண்ணற்ற வடிவங்கள் உடையவர்; ஸர்வகதம் - எங்கும் நிறைந்தவர்; ஸுஸூக்ஷ்மம் - மிகவும் நுண்ணியவர்; அவ்யயம் - அழிவற்றவர்; பூதயோனிம் - படைப்பிற்கு மூலகாரணமானவர்; தீரா: - விழிப்புற்றவர்கள்; பரிபச்யந்தி - எங்கும் காண்கிறார்கள்.

அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது.  அவருக்கு ஆரம்பம் கிடையாது.  அவர் நிறங்கள் அற்றவர்.  அவருக்குக் கண்களோ காதுகளோ கைகளோ கால்களோ கிடையாது. அவர் என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள் உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணியவர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலகாரணமானவர்.  விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்கள்.

No comments: